

அயோத்தி,
அயோத்தியில் வேத கணிதத்தின் அடிப்படையிலும், நேர்மறை ஆன்மீக ஆற்றலை உருவாக்கும் வகையிலும், பகவான் ராமரின் தெய்வீக இருப்பை உணர்த்தும் வகையிலும் யந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. 150 கிலோ எடையுள்ள, தங்க முலாம் பூசப்பட்ட இந்தச் சதுர வடிவ உலோகத் தகட்டில், வேத மந்திரங்களும் 'பீஜ' மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த யந்திரத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்ய உள்ளார். இதற்காக அவர் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு இன்று வருகை தந்தார். அவரை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர், துணை முதல் மந்திரி ஆகியோர் வரவேற்றனர்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திலும் நகரம் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பதற்றமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.