

புதுடெல்லி,
புத்த மதத்தின் முக்கிய பண்டிகையான புத்த பூர்ணிமா மே 1-ந்தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-
“இந்த புனிதமான நாள், பகவான் புத்தர் இப்பூவுலகில் அவதரித்ததையும், ஞானம் பெற்றதையும் மற்றும் மகாபரிநிர்வாணம் அடைந்ததையும் குறிக்கிறது. புத்தரின் கருணை, அகிம்சை, அமைதி மற்றும் ஞானம் ஆகிய, என்றும் நிலைத்திருக்கக் கூடிய போதனைகள், முழு மனித குலத்திற்கும் தொடர்ந்து வழிகாட்டும்.
உலகம் எண்ணற்ற சவால்களை சந்தித்து வரும் இன்றைய காலகட்டத்தில், நாம் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர நல்லிணக்கப் பாதையில் பயணிக்க பகவான் புத்தரின் போதனைகள் நம்மை ஊக்குவிக்கின்றன. இந்த மங்களகரமான தருணத்தில், அவருடைய கொள்கைகளை உள்வாங்கி, அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீதியுடைய ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்பதற்கு நாம் உறுதியேற்போம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.