காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மலர்தூவி மரியாதை

தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மலர்தூவி மரியாதை
Published on

புதுடெல்லி,

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

தலைநகர் டெல்லியில் ராஜ்காட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானியும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்த நாளையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், காந்தி ஜெயந்தியையொட்டி பாபுவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பிறந்த நாளில் உண்மை, அகிம்சை, நல்லிணக்கம், அறநெறி, எளிமை ஆகியவற்றின் மதிப்பினை உணர்ந்து கடைப்பிடிக்க நம்மை நாம் மறுஅர்ப்பணம் செய்வோம் என கூறி உள்ளார்.

மேலும், மகாத்மா காந்தியின் கொள்கைகள் இன்றைக்கும் அனைவருக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. அது மட்டுமின்றி, நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் தீபமாகவும் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும், காந்திக்கு புகழாரம் சூட்டி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், ராஜ்காட்டில் பாபுவுக்கு அஞ்சலி செலுத்தினேன். அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றில் காந்திஜியின் அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது. ஏழைகளில் ஏழ்மையானவர்கள், அதிகாரம் பெறும் உலகத்தை அவர் கற்பனை செய்தார். அவரது லட்சியங்கள், நமக்கு வழிகாட்டும் தீபம் என கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி டெல்லியில் விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை நாம் நினைவுகூர்வோம். அவர் இந்தியாவின் மாபெரும் மகன். அவர் அர்ப்பணிப்பு உணர்வோடு நாட்டுக்காக உழைத்தார். அவரது துணிச்சல், எளிமை, நேர்மை ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஊக்க சக்தியாக திகழும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், விஜய்காட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்தினேன். அவர் நாட்டுக்கு செய்த மதிப்புமிக்க பங்களிப்பை ஒரு போதும் மறக்க முடியாது. தனது கொள்கைகளில் இருந்து ஒரு போதும் விலகாத மாபெரும் தலைவராக அவர் திகழ்ந்தார் என கூறி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி, காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு மறைந்த தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com