ஆம் ஆத்மி 20 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்தனர் தேர்தல் கமிஷன் சிபாரிசை ஏற்று ஜனாதிபதி நடவடிக்கை

டெல்லியில், ஆதாயம் பெறும் இரட்டை பதவி வகித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தங்கள் சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தனர். #ArvindKejriwal #NewDelhi
ஆம் ஆத்மி 20 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்தனர் தேர்தல் கமிஷன் சிபாரிசை ஏற்று ஜனாதிபதி நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி எம்.எல். ஏ.க்கள் 21 பேர் மந்திரிகளின் பாராளுமன்ற செயலாளராக நியமிக் கப்பட்டதால், ஆதாயம் பெறும் இரட்டை பதவி தடை சட்டத்தின் கீழ் அவர்களுடைய எம்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி ராஷ்ட்ரீய முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 21 எம்.எல்.ஏ.க்களை பாராளுமன்ற செயலாளராக நியமித்தது செல்லாது என தீர்ப்பு கூறியது.

இதைத்தொடர்ந்து இரட்டை பதவி வகித்த 21 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி பிரசாந்த் பட்டீல் என்ற வக்கீல் ஜனாதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தேர்தல் கமிஷனின் பரிசீலனைக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்தார். மேலும் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டது.

இந்த நிலையில் ஜர்னைல் சிங் என்ற எம்.எல்.ஏ. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்ததால், மீதமுள்ள 20 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிப்பது பற்றி கடந்த 19-ந் தேதி ஜனாதிபதிக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு செய்தது.

தேர்தல் கமிஷனின் இந்த முடிவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தேர்தல் கமிஷன் முடிவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்தநிலையில், ஆதாயம் பெறும் இரட்டை பதவி வகித்த 20 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்குமாறு தேர்தல் கமிஷன் வழங்கிய சிபாரிசை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகக்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தேர்தல் கமிஷனின் சிபாரிசை ஏற்று டெல்லி சட்டசபை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை ஜனாதிபதி தகுதிநீக்கம் செய்து இருப்பதால், அவர்கள் 20 பேரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை இழந்து விட்டதாக கூறப்பட்டு உள்ளது.

20 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்ததை தொடர்ந்து, அவர்கள் உறுப்பினர்களாக இருந்த சட்டசபை தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com