

புதுடெல்லி,
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், 3 நாட்கள் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 9ம் தேதி செவ்வாய்கிழமை மாலை டெல்லியிலிருந்து தனி விமானத்தில் அவர் புறப்படுகிறார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் வரவேற்பு முடிந்து, காரில் கவர்னர் மாளிகைக்கு புறப்படடு செல்கிறார்.
மறுநாள் 10 ஆம் தேதி புதன்கிழமையன்று சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார். அதன்பின்பு தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். இதனை தொடர்ந்து வரும் 11 ஆம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.
தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11 ஆம் தேதி பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் ராம்நாத் கோவிந்த் டெல்லி செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில் நேற்று முதல் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 11 ஆம் தேதி மாலை வரை தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.