

புதுடெல்லி,
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி இந்தியா கேட் வளாகத்தில் தேசிய போர் நினைவிடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 40 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நினைவு சின்னத்தில் நான்கு சக்கரங்கள் அமைந்துள்ளன. அவை அமர் சக்ரா, வீர்தா சக்ரா, தியாக் சக்ரா, ரக்ஷக் சக்ரா ஆகியவை ஆகும்.
இதில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தின் மத்தியில் 15.5 மீட்டர் உயரத்தில் தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அணையா விளக்கு, இந்திய ராணுவத்தின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் 74வது சுதந்திர தினமான இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே, கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவுரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.