

புதுடெல்லி,
பா.ஜனதாவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்ஹா ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசுகையில், 1975-ல் காங்கிரஸ் அரசால் நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியைவிட மோசமான சூழ்நிலைதான் இப்போது நிலவுகிறது. 43 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திராகாந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட எமர்ஜென்சி 2 ஆண்டுகளில் நீக்கப்பட்டது. இப்போதைய தலைமுறையினர் அதனை புதுப்பித்து பார்ப்பது கிடையாது. அவர்களுக்கு அது வரலாறு மட்டும்தான். எமர்ஜென்சியை பிரகடனப்படுத்திய காரணத்திற்காக 1977-ல் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார் இந்திரா காந்தி.
இப்போது இது வரலாற்றின் பகுதியாக மாறிவிட்டதால், அது குறித்து விவாதிக்க முடியாது.
ஆனால், இப்போது பாரதீய ஜனதா ஆட்சியில் நாட்டில் நிலவும் சூழல் எமர்ஜென்சியை காட்டிலும் மோசமாக இருக்கிறது. வரலாற்றில் எப்போதோ நடந்த சம்பவத்தை பா.ஜனதாவினர் சர்ச்சையாக்கி வருகிறார்கள். இது தேர்தலை குறிவைத்துதான். 1975 எமர்ஜென்சியைப் போல், இப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைக்குள் வைக்கப்படவில்லை, இருப்பினும் மோசமான சூழ்நிலைதான் உள்ளது. மக்கள் மிகவும் பயந்து உள்ளார்கள். அவர்கள் பேசுவதற்கு அச்சம் கொள்கிறார்கள். இதில் மத்திய அமைச்சர்களுக்கு கூட விதிவிலக்கு கிடையாது. இது இந்திராகாந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட எமர்ஜென்சியைவிட மோசமானதாக இருக்கிறது.
இப்போது உள்ள பா.ஜனதா அரசில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் நெருக்கடியை சந்திக்கிறார்கள், அவர்கள் பத்திரிக்கை நிறுவனம் மூலம் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இன்று நிலையானது மிகவும் மோசம் அடைந்துள்ளது. மீடியாக்கள் முழுவதுமாக மக்களுக்குத் தவறானவற்றை சித்தரிக்கும் தோற்றத்தை உண்டாக்குகின்றன. முற்றிலும் அடிபணிய செய்யப்பட்டு அவர்கள் ஏற்படுத்திய கோட்டில் நிற்க செய்யப்பட்டு உள்ளது, என்று விமர்சனம் செய்துள்ளார்.