

போலீஸ் நிலையம் எரிப்பு
சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை தொடங்கினார். 1922-ம் ஆண்டு, அந்த போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஆங்கிலேய போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 3 பேர் பலியானார்கள்.
இதனால் கொந்தளித்த போராட்டக்காரர்கள், சவுரி சவுரா போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்தனர். இதில் அங்கிருந்த 23 போலீசார் பலியானார்கள். சவுரி சவுரா, இன்றைய உத்தரபிரதேச மாவட்டத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ளது. 1922-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி இச்சம்பவம் நடந்தது. இந்த வன்முறையால் மனமுடைந்த காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெற்றார்.
19 பேருக்கு தூக்கு
அதே சமயத்தில், சவு சவுரா சம்பவம் தொடர்பாக நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 228 பேர் மீது வழக்கு நடந்தது . 6 பேர், விசாரணையின்போதே இறந்து விட்டனர். 172 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேல்முறையீட்டில், 19 பேருக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்தமான் சிறையில் 11 பேர் ஆயுள் தண்டனையும், மற்றவர்கள் நீண்டகால சிறைத்தண்டனையும் அனுபவிக்குமாறு உத்தரவிட்டது. இச்சம்பவம் சுதந்திர போராட்ட எழுச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது.
தபால்தலை வெளியீடு
சவுரி சவுரா சம்பவம் நடந்து நேற்று 99 ஆண்டுகள் முடிவடைந்து, 100-ம் ஆண்டு தொடங்கியது. உத்தரபிரதேச மாநில அரசு, இதை ஒரு வருடம் கொண்டாட முடிவு செய்துள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுரி சவுரா நினைவிடம் அலங்கரிக்கப்பட்டது.
நேற்று இந்த நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள், உத்தரபிரதேசத்தில் 75 இடங்களில் நடைபெற்றன. அதில், கோரக்பூரில் நடந்த விழாவை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
விழாவை குறிக்கும்வகையில் தபால் தலையையும் வெளியிட்டார்.சவுரி சவுரா சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் சந்ததிகளை சேர்ந்த 99 பேர், இந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.
இதயத்தில் வைத்த தீ
விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது:-
சவுரி சவுரா சம்பவம், வெறும் போலீஸ் நிலைய எரிப்பு சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அது உணர்த்தும் செய்தி பெரியது. போலீஸ் நிலையத்துக்கு மட்டும் தீவைக்கப்படவில்லை, எல்லா இந்தியர்களின் உள்ளத்திலும் சுதந்திர தீ வைக்கப்பட்டது.
இது சாதாரண மக்கள் சுய எழுச்சியுடன் நடத்திய போராட்டம். ஆனால் அந்த தியாகிகளுக்கு வரலாற்று பக்கங்களில் உரிய இடம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதில் ஆங்கிலேயர்கள் உறுதியாக இருந்தபோது, பாபா ராகவ்தாஸ், மதன்மோகன் மாளவியா ஆகியோர் வாதாடி, அவர்களில் 150 பேரை தூக்கில் இருந்து காப்பாற்றினர். மாணவர்கள் இந்த சம்பவம் குறித்து ஆராய்ச்சி செய்து, புதிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.
பட்ஜெட்
கடந்த பல ஆண்டுகளாக, பட்ஜெட் என்றாலே என்னென்ன அறிவிப்புகள் வெளியிடலாம் என்பதன் அர்த்தமாகவே இருந்தது. முந்தைய அரசுகள், நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிடும் வழிமுறையாக பயன்படுத்தி வந்தனர். ஓட்டு வங்கியை மனதில் வைத்தே பட்ஜெட் தயாரித்து வந்தனர். ஆனால், இப்போது அத்தகைய எண்ணத்தையும், அணுகுமுறையையும் நாடு மாற்றிக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.