

புதுடெல்லி,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு அவரது அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.
இரவு 8 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் எம்.பி.க் களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்ற அவர் இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அவருடன் சென்ற அமைச்சர் ஜெயக்குமாரும், அதிகாரிகளும் அங்கேயே தங்கினர்.
இந்த நிலையில் இன்று காலை 11.10 மணி அளவில் பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே பிரதமரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பேரிடர் நிவாரண நிதியை விரைந்து வழங்க பிரதமரிடம் முதல்-அமைச்சர் மனு அளித்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
பிரதமர்- முதலமைச்சர் இடையேயான சந்திப்பின் போது அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் இருந்தார். பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் சில நிமிடங்கள் முதல்-அமைச்சர் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் - முதலமைச்சர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அரசியல் சூழல் குறித்து பிரதமருடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.