

புதுடெல்லி,
ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபரான ஷேக் கலீபா பின் சையத் அல் நகியான் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே அலுவல் பணிகளை கவனித்து வந்தார். நேற்று மதியம் அபுதாபி அதிபர் அரண்மனையில் அதிபர் ஷேக் கலீபா காலமானார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நகியான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் முகம்மது பின் சையத்துக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபுதாபியின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சையத் அல் நகியானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், நமது விரிவான கூட்டாண்மை தொடர்ந்து ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.