கேதர்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - இன்று பத்ரிநாத் செல்கிறார்

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கேதர்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் இன்று பத்ரிநாத் செல்ல உள்ளார்.
கேதர்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - இன்று பத்ரிநாத் செல்கிறார்
Published on

கேதர்நாத்,

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. மத்திய பிரதேசத்தில் நேற்று முன்தினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, மாலை டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மலையில் உள்ள சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். டெல்லியில் இருந்து டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம் வந்தடைந்த அவர், பின்னர் நேரடியாக கேதர்நாத் கோவிலுக்கு சென்றார். அப்போது அவர் பாரம்பரிய உடை அணிந்து இருந்தார்.

இதையடுத்து கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து அரை மணி நேரம் சிவனை வழிபட்டார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் கோவிலை சுற்றி பார்வையிட்டார். கேதர்நாத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கோவில் அருகே உள்ள குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார். இரவிலும் அங்கு தங்கினார். கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக அவர் கேதர்நாத் சென்றுள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி கேதர்நாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கம்பீரமான மலைகள்! கேதர்நாத் செல்லும் வழியில் எடுத்த புகைப்படங்கள் என சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

மோடியின் கேதர்நாத் பயணத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேதர்நாத் பயணத்தை முடித்ததும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்ரிநாத் செல்லும் பிரதமர் நரேந்தி மோடி அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மதியம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com