நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கான உயர்ந்த மரியாதையை அளித்தவர் பிரதமர் மோடி - யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவு


நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கான உயர்ந்த மரியாதையை அளித்தவர் பிரதமர் மோடி - யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 Jun 2024 3:28 PM IST (Updated: 27 Jun 2024 3:38 PM IST)
t-max-icont-min-icon

இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை என்று உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி சபாநாயகருக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. செங்கோல் முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் இந்த கடிதத்திற்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கான உயர்ந்த மரியாதையை அளித்தவர் பிரதமர் மோடி என்று உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.

'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்" என்று அதில் யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story