

பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி அடிக்கடி மக்களுக்கு முகத்தை காட்டுகிறார். இவ்வாறு முகத்தை காட்டுவதால் கொரோனா ஓடி போகாது. நீங்கள் அடிக்கடி முதல்-மந்திரிகளின் கூட்டத்தை நடத்துகிறீர்கள். இவ்வாறு கூட்டங்களை நடத்தி பாடம் நடத்த நீங்கள் என்ன தலைமை ஆசிரியரா? முதலில் மாநிலங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக்சிஜனை வழங்குங்கள் என்று கேட்டால், சட்டவிரோதமாக மருந்துகளை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் சொல்கிறார். நீங்கள் என்ன மாநிலங்களின் அனுமதி பெற்று ஆக்சிஜனை ஏற்றுமதி செய்தீர்களா?
பெங்களூருவில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான நோயாளிகள் ஆஸ்பத்திரிகள் முன்பு நிற்கிறார்கள். அவர்களின் கதி என்ன. கொரோனா பரவல், கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதாக எடியூரப்பா கூறியுள்ளார். கொரோனாவை நிர்வகிக்க முடியாத முதல்-மந்திரியை வைத்துக்கொண்டு வைரஸ் பரவலை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பிரதமர் மோடி பதில் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.