

பெங்களூரு: மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களில் வெற்றி பெற்றதற்காக பசவராஜ் பொம்மைக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பாராட்டு
கர்நாடகத்தில் 4 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பா.ஜனதா 2 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகி இருந்தது. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக பா.ஜனதாவின் 3-வது வேட்பாளர் லெகர்சிங்கும் வெற்றி வாகை சூடினார். இதற்காக முதல்-மந்தி பசவராஜ் பொம்மையை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி பாராட்டு தெரிவித்தனர்.
பசவராஜ் பொம்மையுடன் பிரதமர் மோடி பேசும்போது, "மாநிலங்களவைக்கு கர்நாடகத்தில் இருந்து 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. உங்களின் இந்த முயற்சி விலைமதிப்பற்றது. கர்நாடகத்தின் இந்த பங்களிப்பு இன்னும் சிறப்பாக பணியாற்ற உத்வேகம் அளிப்பதாக அமையும்" என்று கூறினார்.
மிகப்பெரிய பரிசு
உள்துறை மந்திரி அமித்ஷா முதல்-மந்திரியிடம் பேசுகையில், "நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் எண்ணிக்கை விளையாட்டில் கர்நாடகத்தில் 3 இடங்களில் வெற்றி பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாநிலங்களவையில் பா.ஜனதாவின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இது மிகப்பெரிய பரிசு ஆகும். இதற்காக தங்களை பாராட்டுகிறேன்" என்று தெரிவித்தார்.
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பசவராஜ் பொம்மையிடம் தொலைபேசியில் பேசியபோது, "நீங்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு உரிய பலன் கிடைத்துள்ளது. நீங்கள் வகுத்த தந்திரம் வெற்றி பெற்றுள்ளது. இதை சிறப்பாக மேற்கொண்ட உங்களை பாராட்டுகிறேன்" என்று தெரிவித்ததாக முதல்-மந்திரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.