நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

தி.நகரில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்-அமைச்சர் முக மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசின் ‘தகைசால்’ விருது பெற்றவருமான ஆர்.நல்லகண்ணு 101 வயதில் மரணம் அடைந்தார்.இறுதி அஞ்சலிக்காக, மறைந்த நல்லகண்ணுவின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து, சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை மாலை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக நல்லகண்ணுவின் உடல் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.

பின்னர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அவரது விருப்பப்படி, சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்காக நல்லகண்ணுவின் உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது. நல்லகண்ணு மறைவையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி ஒரு வாரம் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “பின்தங்கிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகளுடன் அவர் கொண்டிருந்த பிணைப்பு மற்றும் அவர்களுக்காக குரல் கொடுக்க எடுத்த முயற்சிகளுக்காக நல்லகண்ணு நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு. நல்லகண்ணுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான நேர்மை, எளிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு தோழர் ஆர். நல்லகண்ணுவின் வாழ்க்கை ஒரு அரிய எடுத்துக்காட்டாகும். கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக அவர் நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியாக நின்றார். அவரது குடும்பத்தினர், சகாக்கள் மற்றும் அவரை நேசித்த எண்ணற்ற மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com