பிரதமர் மோடி எரிபொருளை சேமிக்க வலியுறுத்தல்; நூற்றுக்கணக்கான வாகனங்களில் பவனி வந்த பா.ஜ.க. தொண்டர்கள்

உஜ்ஜைன் நகரில் இருந்து போபாலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வாகனங்களில் நேற்று சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி எரிபொருளை சேமிக்க வலியுறுத்தல்; நூற்றுக்கணக்கான வாகனங்களில் பவனி வந்த பா.ஜ.க. தொண்டர்கள்
Published on

போபால்

மேற்காசிய போரால் உலகளாவிய அளவில் எரிபொருள் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி பேசும்போது, நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

இந்திய பொருளாதாரம் வலுப்படுவதற்காகவும், அந்திய செலாவணி இருப்பை பாதுகாக்கும் நோக்கிலும் இத்திட்டங்களை அவர் கூறினார். வீட்டில் இருந்து பணிபுரிதல், தங்கம் வாங்க வேண்டாம், எரிபொருள் நுகர்வை குறையுங்கள் உள்பட பல்வேறு விசயங்களை பற்றி அவர் பேசினார்.

பிரதமர் மோடி எரிபொருளை சேமிக்க வலியுறுத்தி வரும் சூழலில், பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்களோ அதிக அளவில் எரிபொருளை பயன்படுத்தும் வகையில் அடுத்தடுத்து நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் பாடநூல் கழக தலைவர் சவுபாக்ய சிங் தாக்குர், உஜ்ஜைன் நகரில் இருந்து போபாலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வாகனங்களில் நேற்று சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மத்திய பிரதேச காதி கிராமோத்யோக் வாரிய தலைவர் பங்கஜ் ஜோஷி, அவருடைய ஆதரவாளர்கள் அதிக அளவிலான வாகனங்களில் சென்றார்.

அவருடைய ஆதரவாளர்களில் ஒருவர் இதுபற்றி கூறும்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளர்கள் வந்துள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோள் எங்களுக்கு முக்கியம்தான். ஆனால், இது கட்சி தொண்டர்களின் ஆர்வம் சார்ந்த விசயம். ஒரு நாள் இப்படி வாகனங்களில் சென்றால், அது ஒன்றும் குற்றம் ஆகாது என்றார்.

மத்திய பிரதேச லகு உத்யோக் நிகாம் தலைவரான சத்யேந்திர பூஷண் சிங் அலுவலகத்திற்கு கடைசி நாளில் செல்லும்போது, இ-ரிக்சாவை தேர்ந்தெடுத்து சென்றார். ஆனால், அதனை பின்தொடர்ந்து 40 வாகனங்கள் சென்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com