

புதுடெல்லி,
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். வெளியூர்களில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மேலும் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகளை வாங்குவதற்காக கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பண்டிகை கால விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-
“மங்களகரமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் ஒளியால் ஜொலிக்கிறது. இந்த தீப ஒளித் திருவிழா, இருளுக்கு எதிரான நமது உறுதியின் பிரதிபலிப்பாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
இந்த பண்டிகையும், வரவிருக்கும் காலமும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும். நானும் தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன். வீரமிக்க ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனது வழக்கம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அது இந்த முறையும் தொடரும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.