

புதுடெல்லி,
ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியையும் அவசரகாலத்துக்கு பயன்படுத்த மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசிகளை விரைவில் அனுப்பி வைப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தகவல் அனுப்பி உள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான 2-ம்கட்ட ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்க இருப்பதால், இதுகுறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி, வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவர் அவ்வப்போது முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு அவர் முதல்-மந்திரிகளுடன் விவாதிப்பது இதுவே முதல்முறை ஆகும். நாட்டில் தற்போதைய கொரோனா பரவல் நிலவரம், மாநிலங்களுக்கு தடுப்பூசி வினியோகம, தடுப்பூசி போடும் பணியை தொடங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர் கலந்தாலோசனை நடத்துகிறார்.