

புதுடெல்லி,
கார்கில் எல்லைக்குள் கடந்த 1999ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய வீரர்கள் தீரமுடன் விரட்டியடித்தனர். ஆபரேஷன் விஜய் என பெயரிடப்பட்ட அந்த போர் நடவடிக்கையில் 1000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.
இந்த போர் வெற்றியின் 19வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு டெல்லி அமர்ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முப்படை தளபதிகள் கலந்துகொண்டனர்.
கார்கில் வெற்றி தினத்தையொட்டி உயிரிழந்த வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், நமது ஆயுதப்படையின் வீரத்தையும், தியாகத்தையும் இந்த தருணத்தில் ஒவ்வொரு இந்தியனும் ஒப்புக்கொள்ள வேண்டும். கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நாம் வணங்குவோம் என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், அமைதி சூழலை சீர்குலைக்க முயன்றவர்களுக்கு சரியான பதிலடியை கொடுத்து நமது துணிச்சல் மிகுந்த வீரர்கள் பாதுகாப்பை மீண்டும் உறுதி செய்தனர். இதை இந்தியா எப்போதும் பெருமையுடன் நினைவில் கொள்ளும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரும் கார்கில் போர் கதாநாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.