

புதுடெல்லி,
மக்களவையில் பிரியங்கா பேசியதாவது:
இந்திய தேசிய காங்கிரஸ் மகளிர் பாதுகாப்பு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு உறுதியாக ஆதரவளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது, மேலும் தொடர்ந்து அவ்வாறே செயல்படும். இந்த மசோதாவில் அரசியல் உள்ளது. குறிப்பிட்ட பிரிவினரின் கவலைகள் பின்னர் சரி செய்யப்படும் என பிரதமர் சாதாரணமாக கூறுகிறார். எந்த பிரிவினரை அவர் சொல்கிறார். அவர் ஓபிசி பிரிவினரை சொல்கிறார். அவர்களின் பிரச்சினையை பிறகு பார்ப்போம் என சொல்கிறார். அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இது தொழில்நுட்ப பிரச்சினை என சொல்வதன் மூலம் இந்த விவகாரத்தை ஓரங்கட்ட முயற்சி நடக்கிறது. அவர்களின் தேவையையும் கோரிக்கையையும் நாங்கள் எழுப்புகிறோம். ஆனால், அதனை தொழில்நுட்ப பிரச்சினை என பிரதமர் சொல்கிறார். மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை கூட்டப்படுவது குறித்து அரசியல் திருத்த மசோதா மீதான நடவடிக்கைகளின் போது எதுவும் கூறப்படவில்லை.
அமைப்புகள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஜனநாயகத்தை அழிக்கும் பணியை அரசு துவங்கி உள்ளது. தற்போது ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் எப்போதும் பாதி உண்மையை மட்டுமே பேசுகிறார். எதிர்க்கட்சிகள் உள்ளன எனக்கூறும் பிரதமர், யார் உண்மையில் எதிர்க்கிறார் எனக்கூறவில்லை. எதிர்ப்பு உள்ளது எனக்கூறும் அவர் யார் எனக்கூறவில்லை. ஆனால், உண்மையில், பாஜக தான் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
2019 ல் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடந்த 2018 லேயே ராகுல் கடிதம் எழுதினார். ராகுலை சாதாரணமாக எடுத்துக் கொண்ட பிரதமர், ஆனால், அவரது வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்று இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து விவாதித்து வருகிறோம்.
பிரதமர் இன்று ஆற்றிய உரையின் மூலம் மகளிருக்கான இடஒதுக்கீட்டிற்கு மிகப்பெரிய ஆதரவாளராக பாஜக மட்டுமே திகழ்ந்து வருவதை போன்று பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான அங்கீகாரத்தை நாங்கள் கோரவில்லை என்று அவர் கூறினாலும், அதற்கு மாறாக பிரதமரின் கருத்து இருந்தது. 543 எம்.பி. தொகுதிகளுக்குள்ளேயே 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது.
தொகுதி மறுவரையறைக்கு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, ஓபிசி சமுதாயத்தினரின் உரிமையை பறித்து கொள்ள முயற்சி செய்கிறார். அவர்களுக்கு அநீதி இழைக்க முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் இதனை அனுமதிக்காது. அரசியலமைப்பு அனைவருக்குமானது. இந்த நாடு ஒவ்வொரு குடிமக்களுக்கும் சொந்தமானது.
இவ்வாறு அவர் கூறினார்.