2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி

ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி
Published on

புதுடெல்லி,

கடந்த 2016-ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து ரூ.2,000 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.

அண்மைக்காலமாக ரூ.2,000 நோட்டுகள் ஏ.டி.எம்.களில் சரிவர கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட உள்ளதாகவும், மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை உடனடியாக வங்கிகளில் மாற்றி கொள்ளும்படியும் இணையதளங்களில் பலவிதமான செய்திகள் பரவியது. ஆனால் அப்படி எந்த எண்ணமும் இல்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுவரை அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, உயர் மதிப்பு கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் 2016-17 மற்றும் 2017-18-ம் நிதி ஆண்டுகளில் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டது. 2016-17-ம் நிதி ஆண்டில் 354 கோடி எண்ணிக்கையில் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டது. அதன்பின்னர் நோட்டு அச்சடிப்பதை படிப்படியாக குறைத்து விட்டது.

அதன்படி 2017-18-ம் நிதி ஆண்டில் 11 கோடி எண்ணிக்கையிலும், கடந்த நிதி ஆண்டில் (2018-19) 4 கோடி எண்ணிக்கையிலும் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டன.

நடப்பு நிதியாண்டில் (2019-2020) இதுவரை ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும், ஊழலை தடுப்பதற்காகவும் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com