சிறையில் வசதிகள்: மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க நடிகர் தர்ஷன் முடிவு

சிறையில் வசதிகள் கோரி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க நடிகர் தர்ஷன் முடிவு செய்துள்ளார்.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் அவர் தனிமை அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் தலையணை, படுக்கை கொடுக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும், சிறை அதிகாரிகள் அவற்றை தர்ஷனுக்கு கொடுக்க மறுத்து வருகிறார்கள். இதையடுத்து, தலையணை, படுக்கை கேட்டும், சிறை அதிகாரிகளுக்கு எதிராகவும் பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டில் தர்ஷன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான தீர்ப்பு வருகிற 9-ந் தேதி வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே பரப்பன அக்ரஹாராவில் தனிமை சிறைக்குள் அடைக்கப்பட்டு உள்ளதாலும், சாதாரண கைதிக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் கூட கிடைக்காத காரணத்தாலும் நடிகர் தர்ஷன் மிகவும் சிரமப்பட்டு வருவதாக ஏற்கனவே அவரது வக்கீல் கோர்ட்டில் வாதிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சிறைக்குள் தனக்கு அதிகாரிகள் தொல்லை கொடுப்பதாகவும், தனிமை சிறையில் அடைத்து வைத்துள்ளதால், மனித உரிமையை பறிப்பதாகவும், எனவே இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில்புகார் அளிக்கவும் நடிகர் தர்ஷன் முடிவு செய்துள்ளார். இதுபற்றி தனது வக்கீலுடன் அவர் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், கூடிய விரைவில் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.






