

மும்பை,
தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி கணேஷ் கெய்க்வாட். இவர் நேற்றுமுன்தினம் தானே மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் குப்தா, உங்களுக்காக நியமிக்கப்பட்ட வக்கீல் எங்கே என்று கைதி கணேஷ் கெயக்வாட்டிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த கைதி, தனக்காக வாதாட நீங்கள் நியமித்த வக்கீல் ஆஜராக வரவில்லை என்று பதிலளித்தார். இதையடுத்து உங்களுக்கு வேறு ஒரு வக்கீலை நியமிக்கிறேன் என்று நீதிபதி தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கைதி தனது காலில் கிடந்த செருப்பை கழற்றி நீதிபதி மீது வீசினார். அப்போது சுதாரித்து கொண்ட நீதிபதி குனிந்து கொண்டதால் நல்ல வேளையாக அவர் மீது செருப்பு விழவில்லை.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் கைதி கணேஷ் கெய்க்வாட்டை கோர்ட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். பின்னர் நீதிபதி மீது செருப்பு வீசிய குற்றத்துக்காக தானே நகர் போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
கோர்ட்டு விசாரணையின்போது, கைதி ஒருவர் நீதிபதி மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.