மத்திய அரசின் உத்தரவுக்கு மாறாக தனியார் விமான நிறுவனங்கள் முன்பதிவு சேவை தொடக்கம்

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உத்தரவை மீறி தனியார் விமான நிறுவனங்கள் , மே 3ம் தேதிக்கு பிறகான முன்பதிவு சேவையை தொடங்கியுள்ளன.
மத்திய அரசின் உத்தரவுக்கு மாறாக தனியார் விமான நிறுவனங்கள் முன்பதிவு சேவை தொடக்கம்
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி வருகிற மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். மேலும், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார். இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள், போக்குவரத்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ரயில், விமானம், சாலை உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. விமான டிக்கெட் முன்பதிவை தற்போது தொடங்க கூடாது என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையை தொடங்குவது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்னரே , தனியார் விமான நிறுவனங்கள் முன்பதிவு சேவையை தொடங்க வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சில தனியார் விமான நிறுவனங்கள் , முன்பதிவு சேவையை தொடங்கியுள்ளன. இது தொடர்பாக ஏர் ஏசியா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காலத்திற்கு பிறகான பயணங்களுக்கு தான், முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே விமான பயணங்களுக்கான, டிக்கெட் முன்பதிவை தனியார் நிறுவனங்கள் தொடங்க கூடாது என விமான போக்குவரத்து துறை துணை இயக்குநர் சுனில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com