மைனர்பெண்ணை தாயாக்கிய வழக்கில் தனியார் பள்ளி பஸ் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை; உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

மைனர்பெண்ணை கற்பழித்து தாயாக்கிய வழக்கில் தனியார் பள்ளி பஸ் டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மைனர்பெண்ணை தாயாக்கிய வழக்கில் தனியார் பள்ளி பஸ் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை; உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
Published on

மங்களூரு:

மைனர் பெண் பலாத்காரம்

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா அமாசைபயல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சங்கரநாராயணா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் டிரைவராக இருக்கும் பஸ்சில் 17 வயது மைனர்பெண் ஒருவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு பேசி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் குழந்தைகளை இறக்கி விட்ட பிறகு, தனியாக பேச வேண்டும் என்று கூறி மைனர்பெண்ணை, சுரேஷ் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மைனர்பெண்ணை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற சுரேஷ், அங்கு வைத்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குழந்தை பிறந்தது

பின்னர் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் இதுபற்றி மைனர்பெண் வெளியே யாரிடமும் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சுரேஷ், மைனர்பெண்ணை பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அடிக்கடி பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மைனர்பெண் கர்ப்பமடைந்தார். இதுபற்றியும் அவர் யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த மைனர்பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டு, குளியலறையில் வைத்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பற்றோர், மைனர்பண்ணையும், பச்சிளம் குழந்தையையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கைது

இதுபற்றி மைனர் பெண்ணிடம் விசாரித்தபோது தான், சுரேஷ் அவரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மைனர்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் அமாசைபயல் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் அமாசைபயல் போலீசார், உடுப்பி போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். சுரேசுக்கு நடத்திய டி.என்.ஏ. பரிசோதனையிலும் அவர் தான் குற்றவாளி என்பது நிரூபணமானது.

10 ஆண்டு கடுங்காவல் சிறை

இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது சுரேஷ் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

பாதிக்கப்பட்ட மைனர்பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com