

அமேதி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா, சமீபத்தில் தீவிர அரசியலில் இணைந்தார். அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளர் பதவியும் அளிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் உத்தரபிரதேசத்தில் தீவிர பிரசாரப்பணிகளை தொடங்கி உள்ளார். இதற்காக சமீபத்தில் கங்கை நதியில் 3 நாட்கள் படகு யாத்திரை மேற்கொண்டு கரையோர மக்களிடம் ஆதரவு திரட்டினார். அத்துடன் மாநிலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக தனது சகோதரரும், கட்சியின் தலைவருமான ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக தொகுதியில் பிரமாண்ட வாகன பேரணியில் ஈடுபட்ட அவர், சில பகுதிகளில் பாதயாத்திரையாகவும் சென்று மக்களை சந்தித்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் முசாபிர்கானா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் பூத் (வாக்குச்சாவடி) கமிட்டி நிர்வாகிகளை பிரியங்கா சந்தித்தார். எனது வாக்குச்சாவடி, எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது.
மேலும் இந்த பயணத்தின் போது புற்றுநோயால் அவதிப்படும் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டுக்கு சென்ற பிரியங்கா, பாரபங்கி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தனுஜ் புனியாவின் வீட்டுக்கும் சென்று அவரது தந்தையும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.எல்.புனியாவையும் சந்தித்தார்.
முன்னதாக அமேதி செல்லும் வழியில் ஜக்திஸ்பூர் அருகே காம்ராலி சாலையில் அவர் நடந்து சென்றபோது மக்கள் பிரியங்காவை பார்க்க ஆர்வம் காட்டினர். இதைப்போல வாகன பேரணியின்போது பல இடங்களில் வாக்காளர்களிடம் நேரடியாக உரையாடிய பிரியங்கா, அவர்களிடம் கட்சிக்கு ஆதரவு திரட்டவும் தவறவில்லை.
பிரியங்காவின் வருகையால் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டு உள்ளது. அவரது வாகன பேரணி சென்ற இடங்களில் எல்லாம் ஏராளமான தொண்டர்கள் திரண்டு அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.
அமேதி தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா, இன்று (வியாழக்கிழமை) ரேபரேலி தொகுதியில் தனது தாய் சோனியாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை அவர் அயோத்தியில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என மாநில காங்கிரசார் தெரிவித்தனர்.