உ.பி.யில் பலியான விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி: பிரியங்கா காந்தி பங்கேற்பு

உ.பி.யில் லகிம்பூர் சம்பவத்தில் பலியான விவசாயிகளுக்கு பிரியங்கா காந்தி இன்று இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஷிஷ் மிஸ்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா தற்போது சிறையில் உள்ளார். லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே அஜய் மிஸ்ராவை மத்திய மந்திரி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று மவுன விரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சூழலில் பலியான 4 விவசாயிகளுக்கு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் திகோனியா கிராமத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் உ.பி.யில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை லக்னோ வந்தடைந்த பிரியங்கா காந்தி, அங்கிருந்து காரில் லகிம்பூர் செல்கிறார். இதனையடுத்து அந்தப் பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com