உத்தரபிரதேசத்தில் பிரியங்கா பேரணி; காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் - மலர் தூவி வரவேற்றனர்

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்கா பேரணியாக சென்றார். காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் அவருக்கு மலர் தூவி வரவேற்றனர்.
உத்தரபிரதேசத்தில் பிரியங்கா பேரணி; காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் - மலர் தூவி வரவேற்றனர்
Published on

லக்னோ,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா சமீபத்தில் உத்தரபிரதேச கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பிரியங்கா பதவி ஏற்ற பின்னர் நேற்று முதல்முறையாக உத்தரபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்த மாநிலத்தில் பிரியங்காவை முன்னிலைப்படுத்துவதற்காகவும், காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் இந்த சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மேற்கு மண்டல காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருடன் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு நேற்று வந்தார். விமான நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் அவர் பேரணியாக சென்றார். ஒரு வாகனத்தின் மீது நின்றபடி பிரியங்காவும், மற்ற தலைவர்களும் சென்றனர்.

காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் வழிநெடுக சாலையின் இருபக்கமும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வாகனத்தின் மீது மலர்கள் தூவியும், மாலைகளை வீசியும் வரவேற்றனர். அவர் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முதல் நாளே வாருங்கள், நாம் புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம். என்னிடம் இருந்து புதிய அரசியலை தொடங்குங்கள், நன்றி என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்கள் செல்போனில் பிரியங்காவை புகைப்படம் எடுத்தனர். நகரம் முழுவதும் காங்கிரஸ் கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு திருவிழா கோலம் பூண்டிருந்தது. பிரியங்கா உருவத்துடன் கூடிய ரோஸ் கலர் பனியன் அணிந்த பிரியங்கா சேனை என்ற அணியினர் ஊர்வல பாதை முழுவதும் திரண்டு இருந்தனர்.

பிரியங்காவை சிங்கம் மீது அமர்ந்திருக்கும் துர்காதேவியாக சித்தரித்து பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், சகோதரி பிரியங்கா துர்கா தேவியின் அவதாரம் என்று கூறப்பட்டிருந்தது. சில சுவரொட்டிகள் பிரியங்காவுக்கும், அவரது பாட்டி இந்திராகாந்திக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கி ஒட்டப்பட்டிருந்தன.

பிரியங்காவின் வருகையால் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் என்று மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகத்துடன் கூறினார்கள். பிரியங்கா அரசியல் பேரணி செல்வது புதிது இல்லை என்றாலும், தங்கள் குடும்பத்தினர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகள் தவிர வேறு ஒரு தொகுதியில் அவர் பேரணி செல்வது இது முதல்முறையாகும்.

பிரியங்காவும், ஜோதிராதித்ய சிந்தியாவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 14-ந் தேதி வரை லக்னோவில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்கள்.

பிரியங்காவை இந்திய மக்களிடம் ஒப்படைக்கிறோம் - அவரது கணவர் வதேரா கருத்து

பிரியங்கா உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியதையொட்டி சமூக வலைத்தளத்தில் அவரது கணவர் வதேரா கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தில் புதிய பயணத்தை தொடங்கும் உனக்கு எனது வாழ்த்துகள். நீ எனது சிறந்த தோழி, எனது நிறைவான மனைவி, நம் குழந்தைகளின் மிகச்சிறந்த தாய். இப்போது பழிவாங்குதல் மற்றும் சூழ்ச்சி நிறைந்த அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஆனாலும் அவர் மக்களுக்கு சேவை செய்வது அவரது கடமை என்பது எனக்கு தெரியும். எனவே இப்போது அவரை இந்திய மக்களிடம் ஒப்படைக்கிறோம். தயவு செய்து அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு வதேரா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com