

கண்ணூர்,
கேரளம் மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் அனில் குமார். இவரது மகள் ஆதித்யா (28 வயது). இவர், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், பண்ணியனூர் அருகே மனேக்கரா பகுதியை சேர்ந்த சரண் (28 வயது) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.
இதற்கிடையே சம்பவத்தன்று பேருந்து நிறுத்தத்தில் வைத்து ஆதித்யாவுக்கும், சரணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண், பொதுமக்கள் மத்தியில் ஆதித்யாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். அதோடு சரணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த ஆதித்யா கடந்த 14-ந்தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஆதித்யா நேற்று முன்தினம் இறந்தார். முன்னதாக அவர் தனது தாயிடம், தனது ஆண் நண்பர் சரண் அடித்து உதைத்ததாகவும், அதனால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேராசிரியையின் தாய் பானூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சரண் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.