நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவியுடன் பேராசிரியர் ஓட்டம்... அடுத்து நடந்த பரபரப்பு

பேராசிரியர் பிரவீனுக்கு திருமணமாகி இருந்தும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
பெங்களுரு,
கர்நாடக மாநிலம் பெங்களுரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தொட்டபள்ளாப்புராவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பிரவீன் பணியாற்றினார்.
அப்போது அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கும், பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பிரவீனுக்கு திருமணமாகி இருந்தும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே பிரவீனை கண்டித்தனர். மேலும் மாணவிக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடிவந்தனர்.
பின்னர் ஒரு வாலிபருக்கும், மாணவிக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி பிரவீன் தனது மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு அந்த மாணவியுடன் ஓட்டம் பிடித்தார். மாணவியை காணாமல் போனதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவி குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கையில் பேராசிரியருடன் ஓடியது தெரியவந்தது.
இதுபற்றி தொட்டபள்ளாப்புரா மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீனை கைது செய்தனர். மேலும் மாணவியையும் மீட்டனர். பிரவீனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






