நில உரிமை இன்றி காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடை - சுப்ரீம் கோர்ட்டு

நில உரிமை இன்றி காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடை. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
நில உரிமை இன்றி காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடை - சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

நில உரிமை இன்றி சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரை வெளியேற்ற தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த மாதம் 13ந்தேதி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்.

மாநில அரசுகளால் பட்டா உள்ளிட்ட நில உரிமை மறுக்கப்பட்ட பிறகும், சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகளை வெளியேற்றுமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 13ந்தேதி அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இத்தகையோரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறும் 21 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் நாடு முழுவதும் சுமார் 11.80 பேர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. இது பழங்குடியினர் மற்றும் காட்டுவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அதிருப்தி வெளியிட்டு இருந்தன.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகள் (காட்டு உரிமைகளின் அங்கீகாரம்) சட்டம்2006 ஒரு பயனுள்ள சட்டமாகும். காடுவாழ் மக்கள் மிகவும் ஏழைகள் மட்டுமின்றி கல்வியறிவற்றவர்கள் ஆவர். இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் குறித்து அவர்கள் தெரிந்திருக்கவில்லை. எனவே அவர்களின் நன்மைக்காக இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறி இருந்தது.

இந்த மனு மீது நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விரிவாக விசாரணை நடத்தியது.

இதன் முடிவில், பட்டா இன்றி காடுகளில் வசித்து வரும் பழங்குடிகள் மற்றும் காட்டுவாசிகளை வெளியேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர். இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 13ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து நிறுத்தி வைப்பதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், காடுகளில் எந்த அடிப்படையில் பழங்குடியினருக்கு நில உரிமை மறுக்கப்படுகிறது என்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மாநிலங்கள் மட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள குழுவினர் உண்மையில் மேற்பார்வையிடுகிறார்களா? என்பது குறித்து தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com