

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் மருந்து கடை உரிமையாளர், ஒரு தெரு உணவு விற்பனையாளர் மற்றும் ஒரு வண்டி ஓட்டுநர் என்று மூன்று பேர் தனிநபர் சம்பவங்களில் பயங்கரவாதிகளால் இன்று ஒரு மணி நேரத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன்படி ஸ்ரீநகரின் பிரபல மருந்துக் கடை உரிமையாளரும், காஷ்மீரி பண்டிட்டுமான மாக்கன் லால் பிந்துரு அவரது கடையில் வைத்து பயங்கரவாதிகளால் சுடப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டது என மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரி கூறினார்.
இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் ஸ்ரீநகரின் ஹவால் பகுதியில் வெளியூரைச் சேர்ந்த சாலையோர பேல் பூரி வியாபாரி விரேந்தர் என்பவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றிய மேலும் தகவல்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரு கொலைகள் நிகழ்ந்த சில நிமிடங்களில் பந்திபூரா மாவட்டத்தில் உள்ளூர் டாக்சி நிறுத்தம் தலைவர் முகம்மது ஷபி லோன் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நடந்த இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி ஒமர் அப்துல்லா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.