பீகாரில் ஆளும் கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினர்களே மதுபான தொழிலில் ஈடுபடுகின்றனர்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

பீகாரில் ஆளும் அரசின் முக்கிய உறுப்பினர்களுக்கு மதுபான தொழிலில் கூட்டு உள்ளது என பா.ஜ.க. எம்.பி. அதிரடி குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார்.
பீகாரில் ஆளும் கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினர்களே மதுபான தொழிலில் ஈடுபடுகின்றனர்: பா.ஜ.க. குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக கடுமையான கொள்கையை அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி அதனை கடைப்பிடித்து வருகிறது.

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் முதல்-மந்திரியான நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் மாநிலத்தில் மதுபான தடை அமலில் உள்ளது.

இந்த நிலையில், பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்தது. எனினும், 200 பேர் வரை உயிரிழந்து இருக்க கூடும் என்றும், தகவலை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டும் எதிர்க்கட்சிகளால் கூறப்பட்டு வருகிறது.

இவற்றில் சரண் மாவட்டத்தில் அதிக அளவாக 74 பேர் உயிரிழந்து உள்ளனர். சிவான் மாவட்டத்தில் 5 பேரும், பெகுசராய் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இந்த விஷ சாராய பலியானது தொடர்ந்து பீகாரின் பல பகுதிகளுக்கும் பரவியது. 25 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது. 30 பேர் வரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

இதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை பற்றி விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டது.

அதிக அளவில் பலர் பலியான நிலையில், இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

விரிவான அறிக்கையை அளிக்கும்படி அரசையும் கேட்டு கொண்டுள்ளது. போலீசாரின் எப்.ஐ.ஆர். பதிவு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டால் அதுபற்றிய தகவல்களை அளிக்கும்படியும் ஆணையம் கேட்டு கொண்டது. இதனை தொடர்ந்து, 9 பேர் கொண்ட ஆணைய உறுப்பினர்கள் நேற்று முதல் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பாட்னா நகரில் நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், குடோனில் பதுக்கிய 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்த பீகாரை சேர்ந்த பா.ஜ.க. சேர்ந்த எம்.பி. சுஷில் மோடி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பீகாரில் ஆளும் கூட்டணி கட்சிகளான ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு மதுபான தொழிலில் கூட்டு உள்ளது என அதிரடி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.சி.யான ராம்பால் சிங் சந்திரவன்ஷி நடத்திய அதிரடி ஸ்டிங் ஆபரேசனில் அவர்களது கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மதுபானம் குடிப்பவர் என தெரிய வந்துள்ளது. பீகாரில் மதுபானத்திற்கு தடை என்ற ஆளும் கட்சியின் திட்டம் தோல்வி அடைந்து உள்ளது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com