மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்த முன்மொழிவு

மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 650ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டது.


மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்த முன்மொழிவு
Published on: 

புதுடெல்லி,

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 550ல் இருந்து 850ஆக உயர்த்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருந்த மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் என்பதால் அவற்றை நிறை வேற்ற இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு உறுப்பி னர்களின் ஆதரவு அவசியம் ஆகும். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் போதிய ஆதரவு கிடைக்காததால் 3 மசோதாக்களும் தோல்வி யடைந்தன.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலும் இந்த மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 13-ந் தேதி மழைக்காலக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. எனினும், ஜனாதிபதி ஒப்பு தலுடன் கூட்டத்தொடர் முறைப்படி நிறைவு செய்யப்படாமல் உள்ளது. இதற்கிடையே தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதான ஆதரவை பெற மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ந் தேதி தொடங்குகிறது. மக்களவையும், நவம்பர் 30-ம் தேதியும் -டிசம்பர் 2-ந் தேதி மாநிலங்களவையும் கூடுகின்றன. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 543. அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை என்ற அடிப்படையில் 362 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.

மேற்கு வங்கம், மேகால யாவைச் சேர்ந்த தலா ஒரு எம்.பி. உயிரிழந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த ஒரு எம். பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் பாராளுமன்ற மக்களவையில் தற்போது 540 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதன்படி, மசோதாக்களை 360 உறுப்பினர்களின் ஆதரவு நிறைவேற்ற தேவைப்படுகிறது. பா.ஜ.க. வுக்கு 241 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து 319 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

காங்கிரசுக்கு 98 எம். பி.க்கள் உள்ளனர். அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து கூட்டணிக்கு 183 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இந்த 2 கூட்டணிகளையும் தவிர்த்து 22 எம்.பி.க்களுடன் தி.மு.க.. 3 எம்.பி.க்களுடன் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளிடம் 38 எம்.பி.க்கள் உள்ளனர்.

தற்போதைய நிலையில், மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.க. கூட்டணிக்கு மேலும் 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

பிரதமர் மோடி இன்று ஆலோசனை

இந்த பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி இன்று மதியம் மத்திய மந்திரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில், திருத்தப்பட்ட புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்திலும் மக்களவை தொகுதிகள் 50 சதவீதம் உயர்த்த முன்மொழியப்பட்டது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 550ல் இருந்து 850ஆக உயர்த்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத மசோதாவில் இடம்பெறாத 50 சதவீதம் உயர்வு தற்போது எழுத்துப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 650ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 30ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூட இருக்கிறது. அதில், இந்த புதிய திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்தப் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் இருக்கும் முக்கிய அம்சங்கள்:

மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 850-ஆக உயர்த்தப்படும் (மாநிலங்களிலிருந்து 815 பேர் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 35 பேர்).

மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் சீராக 50 சதவீதம் அதிகரிப்பு செய்யப்படும். மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய பிரதிநிதித்துவ விகிதம் தொடர்ந்து பேணப்படும். திருத்தப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி எல்லைகள் 2051-ஆம் ஆண்டு வரை மாற்றப்படாமல் இருக்கும். முதல் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்குப் பிறகு, பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் குழுவில் (Electoral College) சேர்க்கப்படுவார்கள். தொகுதி மறுவரையறை ஆணையத்தின் இறுதி உத்தரவுகளை எந்த நீதிமன்றத்திலும் சவால் செய்ய முடியாது. ஏப்ரல் 16, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய தொகுதி மறுவரையறை மசோதாவைத் திரும்பப் பெற மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

X