

புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சியின் பைரியா தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தி வருபவர்.
அவர் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நேற்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அரசு அதிகாரிகள் தனது பணியை செய்ய மறுப்பு கூறினால் ஒரு குத்து விட்டு பாடம் புகட்டுங்கள். அப்படியும் வேலையை செய்யவில்லை எனில் காலணிகளை கழற்றி அடியுங்கள் என பேசினார்.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அரசு அதிகாரிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களை ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
அரசு அதிகாரிகளை விட பாலியல் தொழிலாளர்கள் மேலானவர்கள். குறைந்தபட்சம் அவர்கள் பணம் வாங்கி கொண்டு தங்களது பணியை செய்கிறார்கள். மேடைகளிலும் ஆடுகிறார்கள். ஆனால் இந்த அதிகாரிகள், பணம் வாங்கிய பின்பும் தங்களது பணியை செய்வதில்லை. அந்த வேலை முடியும் என்பதற்கு உத்தரவாதமும் இருப்பது இல்லை என கூறினார்.
கடந்த மாதத்தில் மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பரை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசினார். ஆளும் பாரதீய ஜனதாவிற்கு எதிராக ராஜ்பர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு பதில் தரும் வகையில் பேசிய சிங், விபசாரி தன்னை போலவே அனைத்து விசயங்களையும் பார்ப்பார் என கூறினார்.
கடந்த கோரக்பூர் இடைத்தேர்தல் பிரசாரத்தில், 2019 மக்களவை தேர்தல் இஸ்லாம் மற்றும் பகவான் இடையேயான போராக இருக்கும் என கூறினார். மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை ராவணனின் தங்கையான சூர்ப்பனகை என குறிப்பிட்டு பேசி கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.