

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாடு கடந்த 16-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி(இன்று) வரை நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பினர் சிலர் ஏ.ஐ. உச்சி மாநாட்டின் கண்காட்சி அரங்கத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டுகளில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘பிரதமர் மோடி சமரசமாகிவிட்டார்’, ‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்’, ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியபடி அரங்கத்திற்குள் ஓடி வந்தனர். அவர்களிடம் கட்சி கொடிகள் எதுவும் இல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தாங்கள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 நபர்களை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஏ.ஐ. கண்காட்சி அரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சிக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“காங்கிரஸ் கட்சியின் ஆணவத்தை நான் கண்டிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தலைவராக உருவெடுத்து வருவதால் காங்கிரஸ் கட்சி பொறாமை மற்றும் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எந்த நேர்மறையான திட்டமோ அல்லது தேசத்தை கட்டியெழுப்பும் யோசனைகளோ இல்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சி உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்துகிறது. மேலும் உலகம் பேசும் மிகப்பெரிய வெற்றியாக இருந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் வெட்கக்கேடான நடத்தைக்கு ராகுல் காந்தி நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.
இது காங்கிரஸின் இந்தியா எதிர்ப்பு உணர்வை தெளிவாக பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு எதிரானது மற்றும் உலகம் முழுவதும் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்துக்கு எதிரானது என்பதை இது தெளிவாக காட்டுகிறது.
இந்த வெட்கக்கேடான செயலுக்கு காங்கிரஸும், ராகுல் காந்தியும் 140 கோடி இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்தியா பற்றிய அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளைப் பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும். இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.