

புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் திக்ரி, சிங்கு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில், திக்ரி போராட்ட களத்தில் ஒரு பெண் போராட்டக்காரர் மீது பாலியல் வன்முறை நடந்தது. அதையடுத்து, அரியானாவில் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், கொரோனாவுக்கு பலியானார்.
இந்தநிலையில், இதுகுறித்து பா.ஜனதா விவசாய பிரிவு தலைவரும், எம்.பி.யுமான ராஜ்குமார் சாஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெண் மீது பாலியல் வன்முறை நடந்ததால், போராட்ட களத்தின் புனிதத்தன்மை மீறப்பட்டுள்ளது. எனவே, போராடும் விவசாயிகள் திக்ரி எல்லையை காலி செய்ய வேண்டும்.
இந்த பாலியல் வன்முறை குறித்து விவசாய சங்க தலைவர்களோ, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலோ கருத்து கூறாமல் மவுனம் சாதிப்பது ஏன்? சந்தேகத்துக்குரிய அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களுக்கு ஆம் ஆத்மியுடன் தொடர்பு இருக்கிறது. அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.