பஞ்சாபில் பாஜக எம்.எல்.ஏ மீது விவசாயிகள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷமிட்ட பா.ஜ.க.வினர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.
பஞ்சாபில் பாஜக எம்.எல்.ஏ மீது விவசாயிகள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அபோஹார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அருண் நரங்க், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பதற்காக மலோட் நகரத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவரை, போராட்டம் நடத்தும் விவசாயிகள் சிலர் தாக்கி, சட்டையை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாநில தலைவர் அஷ்வானி சர்மா தலைமையில் பா.ஜ.க.வினர் கவர்னர் வி.பி.சிங் பட்னோரை நேற்று காலை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் அவர்கள், சண்டிகரில் உள்ள முதல்-மந்திரி அமரிந்தர் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர், தங்கள் எதிர்ப்பை காட்டும்விதமாக சட்டையைக் கழற்றினர்.

காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷமிட்ட பா.ஜ.க.வினர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டினர். பா.ஜ.க. முன்னாள் மந்திரி டிக்ஷான் சூட், அமரிந்தர் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். நேற்று முன்தினம், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்த முதல்-மந்திரி அமரிந்தர் சிங், மாநிலத்தில் அமைதியைக் குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com