நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

எங்கள் கழுத்துகளை அலங்கரிக்கும் பதக்கங்கள் எதற்கு? என்றும் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் வேறு வழியின்றி போலீசார் அவர்களை கைது செய்தனர். பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அன்று இதுபோன்ற பிரச்சினைக்கு டெல்லி முழுவதும் 700 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, அங்கு இருந்த கொட்டகைகள் அனைத்தும் பெயர்த்து எடுக்கப்பட்டன.

இனிமேல் மல்யுத்த வீரர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர். "38 நாட்கள் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் நடத்திய அவர்கள், 28-ந்தேதி சட்டத்தை மீறிவிட்டனர். எனவே அவர்களை அப்புறப்படுத்த வேண்டியதாகி விட்டது. அவர்கள் இனி நகரின் எந்த பகுதியிலும் போராட்டம் நடத்த அனுமதி வாங்கலாம். ஆனார் ஜந்தர் மந்தரில் கிடைக்காது" என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். ஹரித்வாருக்கு பேரணியாக சென்று மாலை 6 மணிக்கு நதியில் பதக்கங்களை வீசுவோம் எனக்கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சாக்சி மாலிக் வெளியிட்ட அறிக்கை:

எங்கள் கழுத்துகளை அலங்கரிக்கும் பதக்கங்களுக்கு இனிமேலும் எந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். அதனை திருப்பி தரும் என நினைக்கும்போதே அந்த எண்ணம் எங்களை கொல்கிறது. சுயமரியாதையை இழந்துவிட்டு, வாழ்வதில் என்ன பயன் உள்ளது எனக்கூறியுள்ளார்.

பஜ்ரங் புனியா கூறுகையில்,

இனிமேலும் எங்களுக்கு பதக்கங்கள் தேவையில்லை. கடுமையான உழைப்பால் கிடைத்த பதக்கங்களை புனித நதியான கங்கை நதியில் வீசுவோம். துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள் எனக்கூறியுள்ளார்.

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com