

புதுடெல்லி,
படித்த வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த் விமர்சனம் செய்து இருந்தார்.இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்று வரும் அபிஜீத் திப்கே என்பவர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற சமூக ஊடகக் கட்சியை தொடங்கினார்.இந்தக் கட்சியை சமூக ஊடகங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை சில நாட்களில் பா.ஜ.க.வின் எண்ணிக்கையைத் தாண்டியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு அந்தக் கட்சியின் இன்ஸ்டா பக்கத்திற்கு தடை விதித்தது.பின்னர் அதே பெயரில் மீண்டும் ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தில் தொடங்கப்பட்டது. அதிலும் பின்பற்றுவோர் எண்ணிக்கை லட்சக்கணக்கைத் தாண்டியது.
இந்த சூழ்நிலையில் நீட் குளறுபடி, சி.பி.எஸ்.இ., ஓ.எஸ்.எம். முறைகேடு ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கல்வித்துறை முறைகேடுகளுக்கு பொறுப்பான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கடும் விமர்சனம் முன்வைத்தது. நீட் குளறுபடி, சி.பி.எஸ்.இ. விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முடிவு செய்தது. போராட்டத்திற்கு ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வருமாறும் அழைப்பு விடுத்தது.இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சிலர் கோர்ட்டுக்கும் சென்றனர். ஆனால் டெல்லி ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்தப் போராட்டத்திற்கு முதலில் அனுமதி கோரப்படவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். அதேநேரத்தில் தாங்கள் அனுமதி பெற்று உள்ளதாக அந்தக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கான போலீசார், துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அமெரிக்காவில் இருந்து இன்று காலை டெல்லி வந்தார்.பின்னர் ஜந்தர் மந்தரில் அபிஜீத் திப்கே தலைமையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், இளைஞர்களின் போராட்டத்திற்கு கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கரப்பான் பூச்சி ஜனதா இயக்கம் என்பது இந்த நாட்டின் இளைஞர்கள் அனுபவித்து வரும் மிகப்பெரிய கோபம் மற்றும் விரக்தியின் வெளிப்பாடாகும். அவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதற்குப் பதிலாக, மோடி அரசு அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆம் ஆத்மி கட்சி (AAP)ஆதரவு அளிக்கிறது. பிரதமர் உடனடியாக கல்வி அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.