

அலிகார்க்,
இந்தியாவை இரண்டாக பிரிப்பதற்கு காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று உள்ளது சர்ச்சையாகி உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ யூனியன் அலுவலகத்தின் சுவரில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் தொங்கவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் யுவ வாஹினி அமைப்பு, 48 மணி நேரங்களில் ஜின்னாவின் புகைப்படம் பல்கலைக்கழகத்தில் அகற்றப்படவில்லை என்றால் நாங்கள், வலுக்கட்டாயமாக அதனை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவ்வமைப்பை சேர்ந்த அமீர் ரஷீத் என்பவர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியதை அடுத்து இவ்விவகாரம் வெளிவந்து உள்ளது. கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து விட்டது. இந்நிலையில் ஜின்னா புகைப்பட விவகாரம் தொடர்பாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் முன் போராட்டம் வெடித்து உள்ளது. போராட்டம் நடத்திய மாணவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர். அங்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஜின்னாவின் புகைப்படத்தை அகற்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் யுவ வாஹினி அமைப்புகள் ஆதரவு கொடுத்ததை அடுத்து இந்து அமைப்புகள் தரப்பில் பேரணி நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்கள் முகமது அலி ஜின்னாவின் புகைப்படத்தை எரித்தார்கள். இந்து அமைப்புகள் தரப்பில் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் ஜின்னாவிற்கு எதிரான கோஷம் எழுப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகம் இன்னும் 48 மணி நேரங்களில் ஜின்னாவின் புகைப்படத்தை அதனுடைய வளாகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற எச்சரிக்கை இந்து அமைப்பினர் தரப்பில் விடுக்கப்பட்டு உள்ளது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தரப்பில் புகைப்படத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.