

பாட்னா,
பீகார் மாநிலம் முசாபர்பூரில் கடந்த வாரம் பாஜக தலைவரின் கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற 9 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்தின் போது, பாஜக தலைவர் குடிபோதையில் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் இன்று பீகார் மாநில சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகியுள்ள பாஜக தலைவர்களில் ஒருவரான மனோஜ் பைதாவுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரினர். அரசியல் காரணங்களுக்காக, பைதாவை நிதிஷ் குமார் பாதுகாப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். ஆனால், நிதிஷ் குமார் அரசு இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது. பீகார் துணை முதல் மந்திரியும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான சுஷில் குமார் மோடி இது பற்றி கூறுகையில், கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ் பைதா, பீகார் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட நிலை நிர்வாகியாக உள்ளார். விபத்து ஏற்படுத்திய சம்பவத்தையடுத்து, மனோஜ் பைதா தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து மனோஜ் பைதாவின் கட்சி உறுப்பினர் பொறுப்பை ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து பீகார் மாநில பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. மனோஜ் பைதாவை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டு எல்லையை ஒட்டி பீகார் உள்ளதால், நேபாளத்திற்கு தப்பி ஓடியிருக்கலாம் எனவும் உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் ஒளிபரப்படுகின்றன.