'தமிழ்நாட்டில் இருந்து 2-வது முறையாக ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது பெருமையான தருணம்' - வைகோ எம்.பி.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ஆஸ்கார் விருது வென்றுள்ளார் என மாநிலங்களவையில் வைகோ எம்.பி. பேசினார்.
'தமிழ்நாட்டில் இருந்து 2-வது முறையாக ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது பெருமையான தருணம்' - வைகோ எம்.பி.
Published on

புதுடெல்லி,

95-வது ஆண்டாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் டால்பி தியேட்டரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலகின் சிறந்த படங்கள், நடிகர், நடிகை உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சிறந்த அசல் பாடல் என்ற பிரிவில், ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற 'நாட்டு..நாட்டு..' என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் மேடைக்கு சென்று ஆஸ்கார் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய மும்பையை சேர்ந்த பெண் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வெஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையின் 2-வது நாள் அமர்வில், ஆஸ்கார் விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய வைகோ எம்.பி., "ஆஸ்கார் விருது வென்றவர்களுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு நாம் ஒன்றிணைந்து வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழ் குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இதற்கு முன்பு ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த பாடல் மற்றும் பின்னனி இசைக்கான ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து 2-வது முறையாக ஆஸ்கார் விருதை வென்றுள்ளது பெருமையான தருணம்."

இவ்வாறு வைகோ எம்.பி. தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com