பொருளாதாரம் வளர்ந்து வருவதால் வணிக கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பொருளாதாரம் வளர்ந்து வருவதால், வணிகங்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பொருளாதாரம் வளர்ந்து வருவதால் வணிக கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டில் நிதித்துறை சார்ந்த திட்ட அறிவிப்புகள் குறித்து பிரதமர் மோடி நேற்று இணையவழியில் பேசினார். அவர் பேசியதாவது:-

நிதி சேவைகள் துறை துடிப்பாகவும், வலிமையாகவும் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது நமது பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. வேகமாக வளர்ந்து வருவதால், அதற்கு சமமாக கடன் வினியோகம் அதிகரிப்பதும் முக்கியம். எனவே, வணிகங்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தேவையான நிதிசார்ந்த அனைத்தையும் செய்ய வேண்டும். சரியான நோக்கத்துடன் எடுக்கப்படும் எல்லா வர்த்தக முடிவுகளுக்கும் மத்திய அரசு துணைநிற்கும்.

தனியார் துறையை ஊக்குவிப்பதுதான் அரசின் நோக்கம். இருந்தாலும், வங்கிகள், காப்பீடு போன்றவற்றில் பொதுத்துறை ஈடுபட்டிருப்பதும் அவசியம். 10 ஆண்டுகளுக்கு முன்பு மிதமிஞ்சிய வகையில் கடன் அளித்ததால், வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன.

முதலீட்டாளர்கள், டெபாசிட்தாரர்கள் ஆகியோரின் நம்பிக்கை, ஒளிவுமறைவற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. வாராக்கடனின் ஒவ்வொரு பைசாவையும் கணக்கில் கொண்டு வருவதுதான் அரசின் கொள்கை.

நாட்டில் 41 கோடி ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் ரூ.1 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 55 சதவீத கணக்குகள், பெண்கள் பெயரில் உள்ளன.

வங்கித்துறையை வலுப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. வங்கித்துறையில் சீர்திருத்தங்கள் தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com