பிஎஸ்எல்விசி62 ராக்கெட் தோல்வி: பசிப்பிக் கடலில் விழுந்த செயற்கைக்கோள்கள்


பிஎஸ்எல்விசி62 ராக்கெட் தோல்வி: பசிப்பிக் கடலில் விழுந்த செயற்கைக்கோள்கள்
x

கடந்த 8 மாதங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 2-வது தோல்வி இதுவாகும்.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி 62 இன்று விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது பாதையில் இருந்து விலகிச் சென்றதால் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமின்றி, நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மைய முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 10.18 மணிக்கு 18 செயற்கைக்கோளுடன் புறப்பட்ட பிஎஸ்எல்வி சி62 ராக்கெட், 8-வது நிமிடத்தில் தனது பாதையில் இருந்து விலகிக் சென்றது.

பாதை விலகிய ராக்கெட்

இந்த ராக்கெட்டில் பிரதானமாக இஓஎஸ்-என் 1 (அன்விஷா) செயற்கைக்கோள் இருந்தது. மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சொந்தமான 17 சிறிய செயற்கைக்கோள்களும் இணைக்கப்பட்டிருந்தது.

பிரதான செயற்கைக்கோளான இஓஎஸ்-என்1 தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புறப்பட்ட 8-வது நிமிடத்தில் ராக்கெட்டின் 3-வது நிலையில் (பி.எஸ்.3) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உந்து விசை குறைந்ததால், குறிப்பிட்ட பாதையில் இருந்து ராக்கெட் விலகிச் சென்றது.

8 மாதங்களில் 2-வது தோல்வி

ராக்கெட்டில் இருந்த 18 செயற்கைக்கோள்களும் புவி ஈர்ப்பு பகுதிக்குள்ளேயே அப்போது இருந்ததால், அனைத்தும் பசிப்பிக் பெருங்கடலில் விழுந்து விட்டது. திட்டமும் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி61 ராக்கெட்டும் இதே பிரச்சினையால் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 8 மாதங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 2-வது தோல்வி இதுவாகும். இது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை ஏற்படுத்தி இருப்பதால் விண்வெளி பயண திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

1 More update

Next Story