ஜனாதிபதி மாளிகையை பிப்ரவரி 3 முதல் பொதுமக்கள் பார்க்க அனுமதி

பொதுமக்கள் அமிர்த தோட்டத்தை கட்டணமின்றி பார்வையிடலாம்.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஜனாதிபதி மாளிகையில் சர்க்யூட்-1 என்ற பாதையில் சென்று, பிரதான கட்டிடத்தை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க முடியும்.
இந்த நிலையில், 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. தொடர்ந்து 29-ந்தேதி, குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் நிறைவாக ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள விஜய் சவுக் பகுதியில் இந்திய ராணுவத்தின் பின்வாங்கு முரசறை நிகழ்ச்சி நடைபெறும்.
இதனையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 21-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஜனாதிபதி மாளிகையில் பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையின் செயலகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்திற்கு பொதுமக்கள் பார்வையிட செல்வதற்காக பிப்ரவரி 3-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை திறக்கப்படும். மக்கள் வாரத்தின் 6 நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (கடைசி நுழைவு மாலை 5.15 மணி) தோட்டத்தை பார்வையிடலாம்.
பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமையும், மார்ச் 4-ந்தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டும் அமிர்த தோட்டம் மூடப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தை கட்டணமின்றி பார்வையிடலாம். இதற்காக, https://visit.rashtrapathibhavan.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மக்கள் தங்கள் வருகையை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






