ஹாசனாம்பா கோவிலில் மக்கள் தரிசனத்துக்கு அனுமதி

ஹாசனாம்பா கோவிலில் நற்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்து நின்று வழிபட்டனர்.
ஹாசனாம்பா கோவிலில் மக்கள் தரிசனத்துக்கு அனுமதி
Published on

ஹாசன்:

ஹாசனாம்பா கோவில்

கர்நாடக மாநிலம் ஹாசனில் புகழ்பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகயையொட்டி மட்டும் 10 நாட்கள் திறக்கப்படுவது வழக்கம். மேலும், கோவில் நடை அடைக்கும் போது ஏற்றப்படும் தீபம் அணையாமலும், பூக்கள் வாடாமலும் இருக்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் மதியம் கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மக்கள் தரிசனம்

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக பூஜை தொடங்கியது. ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மேலும் விரைவு தரிசன கட்டணமாக ரூ.300 மற்றும் ரூ.1000 வசூலிக்கப்பட்டது. அங்கும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. விடிய, விடிய பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்தனர். நேற்று இந்து அறநிலையத்துறை மந்திரி சசிகலா ஜோலே, முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆகியோரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பலத்த பாதுகாப்பு

ஹாசனாம்பா கோவில் நடை வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். பக்தர்களின் வசதிக்காக கோவிலில் கழிவறை மற்றும் குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார மையமும் அங்கு திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com