

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதி அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
எனினும், வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனை அடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேற்று காலை 10 மணியளவில் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, மே 3ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து, ஏப்ரல் 20 வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். பின்னர் தளர்வுகள் இருக்கும். ஏப்ரல் 20க்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும்
யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். விரிவான வழிகாட்டுதல்கள் நாளை (15ந்தேதி) வெளியிடப்படும் என கூறினார்.
இதன்படி, ஊரடங்கு நீட்டிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில், ஏப்ரல் 20ந்தேதி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம். ஆனால் அவை ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஏப்ரல் 20 முதல் அனைத்து வித விவசாய பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதேபோன்று தோட்ட தொழிலுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.