புதுச்சேரி சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் பா.ஜ.க.

பா.ஜ.க. போட்டியிடும் 12 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் பா.ஜ.க.
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி தொடரும் என இரு கட்சி தலைவர்களும் கூறி வந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள், பா.ஜனதா கூட்டணிக்கு 14 இடங்கள் என முடிவானது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உறுதி செய்தார்.

இந்த சூழலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் இணைக்க கூடாது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த கோரிக்கைகளை பா.ஜ.க. ஏற்காததால், என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்ததாக தெரிகிறது. இது பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி அளித்தது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர்கள் தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கு மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட் டம் நேற்று நள்ளிரவு நடந்தது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் கோரிக்கையை பா.ஜ.க. ஏற்காத பட்சத்தில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதா? அல்லது த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது நிர்வாகிகள் சிலர் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று வலியுறுத்தினர்.

இதேபோல் டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர்களால் மேலிட தலைவர்களை நேற்று இரவு வரை சந்தித்து பேச முடியவில்லை. எனவே அவர்கள் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

என்.ஆர்.காங்கிரஸ் உடன் உடன்பாடு ஏற்படாத நிலையிலும் புதுச்சேரியில் இன்று (மார்ச்19) வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. வெளியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் தே.ஜ.கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் 12 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள பா.ஜ.க.வினர் 6 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com