புதுச்சேரி சட்டசபை 23-ந்தேதி கூடுகிறது

புதுவை சட்டசபை வருகிற 23-ந்தேதி கூடுவதையொட்டி பராமரிப்பு பணிகளை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி சட்டசபை 23-ந்தேதி கூடுகிறது
Published on

புதுச்சேரி,

புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் கூடிய சட்டசபை உள்ளது.

கூட்டணி அரசு

புதுவை சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

அன்றைய தினம் பிற்பகலில் நிதி அமைச்சர் பொறுப்பினை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 3-ந்தேதி வரை நடந்தது. அதன்பின் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை கூடுகிறது

சட்டப்படி சட்டசபையானது 6 மாதத்துக்கு ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும். அதன்படி அடுத்த மாதம் 2-ந்தேதிக்குள் சட்டசபை கூட்டம் நடைபெற வேண்டும்.

இதற்காக புதுவை சட்டசபை வருகிற 23-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்று தெரிகிறது. இந்த சட்டசபை கூட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கான அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட உள்ளது.

இதையொட்டி சட்டமன்ற கூட்டம் நடக்கும் மைய அரங்கில் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி நாற்காலிகள், மேஜைகள், ஒலிபெருக்கிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. அதை சபாநாயகர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.

கவர்னர் உரை இல்லை

ஆண்டின் முதலில் இந்த கூட்டம் கூட்டப்பட்டாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்பதால் கவர்னர் உரை இருக்காது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவையில் பல்வேறு காரணங்களால் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் ஒரு சில மாதங்கள் கழித்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகவே மாறியுள்ளது.

முழுமையான பட்ஜெட்

ஆனால் இந்த முறை மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு துறையிலும் பட்ஜெட் தொடர்பான முன்தயாரிப்புகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

மேலும் மத்திய பட்ஜெட்டிலும் புதுவை மாநிலத்துக்கான மானியம் கடந்த நிதியாண்டைப்போல் ரூ.1,729 கோடிதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மாநிலத்தின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com